Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
காங்கயம் மற்றும் திருப்பூரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உட்பட மூவர் உயிரிழந்தனர்.
காங்கயம் முத்தூர் அர்ஜூனாபுரத்தை சேர்ந்தவர் ரேவந்த்(26). சரக்கு வாகன ஓட்டுநர். திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது. இவர் நேற்றுமுன் தினம் இரவு அர்ஜூனாபுரத்தில் இருந்துநத்தக்காடையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியதில் ரேவந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காங்கயம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(37). வெள்ளகோவிலில் நிதி நிறுவனம் நடத்திவந்தார். நேற்றிரவு பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். நத்தக்காடையூர்-காங்கயம் சாலையில் வந்தபோது, சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் விழுந்தது.இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணுகுமார், காங்கயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த இருவிபத்துகள் தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் சிறுபூலுவபட்டி மகாசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(47). மனைவி மலர்விழி(44). இருவரும் பனியன் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருசக்கரவாகனத்தில் விஜயாபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி காங்கயம் சாலையில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது விவேக் (29) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில், தம்பதி பலத்த காயமடைந்தனர். நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்,இரவு ஐயப்பனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊரக போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT