Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுனில் குமார் சுரானா இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுதொடர்பான நிகழ்வில் நேற்று முன்தினம் பங்கேற்ற புதுவை மாநில அதிமுக (கிழக்கு) செயலாளர் அன்பழகனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி பாஜக மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா கேட்டுக் கொள்ள, ‘அதிமுகவிற்கு எத்தனை தொகுதிகள் என நிர்ணயம் செய்யாமல் கையெழுத்திட முடியாது’ என அன்பழகன் தெரிவித்து விட்டார்.
இதுபற்றி அதிமுக தரப்பில் விசாரித்த போது, அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
“கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் எங்கள் கட்சி தனித்தனியே போட்டியிட்டது. அப்போது, 8 இடங்களில் வெற்றி பெற்ற என்ஆர்.காங்கிரஸூக்கு 16 இடங்களை ஒதுக்கியுள்ளனர். நாங்கள் (அதிமுக) 4 இடங்களில் வெற்றி பெற்றோம்; அதன்படி எங்களுக்கு 8 இடங்கள் ஒதுக்குவதே நியாயமானது.
புதுவையைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவையில் நாங்கள் (அதிமுக) 1 லட்சத்து 34 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்றிருந்திருந்தோம். எங்களது வாக்கு சதவீதம் 16.8%. பாஜக 19 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்றிருந்தது. அவர்களுடைய வாக்கு சதவீதம் 2.4 %.
இந்தச் சூழலில் பாஜக வசம் அளிக்கப்பட்டிருக்கும் 14 தொகுதிகளில், எங்களுக்கு 4 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்படுவது எந்த வகையிலும் சரியானது அல்ல.
இதுபற்றி கட்சித் தலைமையை தொடர்பு கொண்டு, எங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறோம். மீதமுள்ள 14 தொகுதிகளில் சரிபாதியாக 7 தொகுதிகளையாவது நாங்கள் பெற வேண்டும். இதையும் தலைமைக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம்” என்கின்றனர்.
இதுபற்றி பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எங்கள் வசம் வந்துள்ளனர். அதனால், 10 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். அதனால்தான் இக்கூட்டணியில் உள்ள பாமகவுக்கே தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அக்கட்சி மேலிடத்தில் பேசியுள்ளோம். விரைவில் தொகுதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகும்” என்கின்றனர்.
இதற்கிடையே, பாமகவிற்கான புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ், ‘புதுச்சேரி, காரைக்காலில் பாமக தனித்து போட்டியிடும்’ என்று அறிவித்திருந்தார். அவர் முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்து, பாமக தலைமைக்கு பட்டியலை அனுப்பி யுள்ளார்.
ஒப்புதல் கிடைத்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
புதுவையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் அதிருப்தியில் உள்ளதால் இக்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT