Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்வேட்பாளர்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்வதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடனான ஆலோசனைகூட்டம், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது.
போட்டியிடும் வேட்பாளர்கள், நாள்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்வதற்காக, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு மற்றும் இதர அத்தியாவசியமான பொருட்களுக்கும் திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப்புள்ளி பட்டியல் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் கருத்துகள் பெறப்பட்டன. அவற்றினை அடிப்படையாகக் கொண்டு, நிலையான விலைப்புள்ளி பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.
இதில் அரசியல் கட்சியினர் கூறும்போது ‘‘நிலையான விலைப்புள்ளி பட்டியல் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோட்டீஸ், மண்டபம் மற்றும் உணவுஉள்ளிட்டவைகளுக்கு விலைப்புள்ளி அதிகமாக உள்ளது. குறிப்பாக மண்டபங்கள் என்று எடுத்துக் கொண்டால், மாநகராட்சிக்கு ஒரு வாடகை, ஊராட்சிக்கு ஒருவாடகை வரும். இவற்றை கருத்தில்கொண்டு விலைப்புள்ளி பட்டியல் வெளியிட வேண்டும்’’ என்றனர்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் பேசியதாவது: அரசியல் கட்சியினர் தங்களது விலைப்புள்ளி ஆட்சேபனையை வரும் 4-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்குள் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் செலவினங்களை நிர்ணயம் செய்யப்படவுள்ள நிலையான விலைப்புள்ளி பட்டியல் கொண்டு கணக்கீடு செய்து, அவர்களது தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும் எனவும், தேர்தலின்போது நியமனம்செய்யப்படும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT