Published : 03 Mar 2021 03:24 AM
Last Updated : 03 Mar 2021 03:24 AM

திருப்பூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் ஆய்வு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கவும், வாக்கு எண்ணிக்கையின்போது தேவையான அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகவும் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. நடப்பு தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் 850 வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, கரோனா சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், கல்லூரியில் கூடுதல் அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப வாக்கு எண்ணும் அறை மற்றும் ஸ்ட்ராங் ரூம் அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

8 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை:

அதேபோல, கல்லூரியின் முதல்வர் அறை உள்ள நிர்வாக கட்டிடத்தில் பல்லடம், திருப்பூர் வடக்கு, அவிநாசி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அறை மற்றும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட உள்ளது. பின்புறம் உள்ள புதிய கட்டிடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியின் வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட உள்ளது. வடகிழக்கு பகுதியிலுள்ள அறையில் தாராபுரம், காங்கயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அறைகள், கல்லூரியின் அண்ணா நினைவு நூற்றாண்டு கட்டிடத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட உள்ளது.

கோரிக்கை

கல்லூரி தரப்பில் ஆட்சியரிடம் பேராசிரியர்கள் கூறும்போது, "கல்லூரியின் பெரும்பான்மை கட்டிடம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிக்கு எடுக்கப்படுவதால், எங்களுக்கு கட்டிடங்கள் இல்லை. 8 அறிவியல் ஆய்வகங்கள், 2 கணினி ஆய்வகங்களை இடம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவேஸ தற்காலிக கூடாரங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். ஆய்வகங்களில் உள்ள வேதிப்பொருட்களையும், கணினிகளையும் பத்திரமாக எடுத்துச் செல்ல ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட ஆட்சியர், அங்கிருந்த பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம், அவர்கள் கேட்கும் விஷயங்களை உடனடியாக செய்துதாருங்கள் என்றார். நகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பட விளக்கம்

திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அமைய உள்ள வாக்கு எண்ணும் அறைகளை ஆய்வு செய்த ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர்.

படம்: இரா.கார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x