Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்துசெல்கின்றன. சோதனைச் சாவடிகள் வழியாக மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்குப் பின்பே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப் படுகின்றன.
சோதனையின்போது, வாகனத்தின் எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களையும் போலீஸார் சேகரிக்கின்றனர். உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூணும், ஜெ.ஜெ. தூணும், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலையும் திரைச்சீலை கொண்டு மூடப்பட்டன.
ரூ.20.73 லட்சம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 9 பறக்கும் படைகள், 9 நிலைக்குழுக்கள், 3 வீடியோ குழுக்கள், 3 வீடியோ தணிக்கை குழுக்கள், 3 கணக்கு தணிக்கை குழுக்கள் மற்றும் 3 தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்புக் குழுக்கள் அடங்கும். மாவட்டத்தில் இரு நாட்களில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு பகுதிகளில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள் ளன.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து ‘சி விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 4138 பேருக்கும் கரோனா தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT