Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக கண்காணிப்பு பணிகளில் 30 பறக்கும் படைகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொன்னையா தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் மேலாளர்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், அச்சகம் மற்றும் பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுடன் தனித்தனியாக நடைபெற்றது. இதில், அனைத்து தரப்பினருக்கும் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பொன்னையா கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34,98,829 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 1,334 இடங்களில் 3,622 வாக்குச்சாவடிகள், 1,280 துணை வாக்குச்சாவடிகள் என 4,902 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த 57,500 வாக்காளர்கள், 18,738 மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள், 30 நிலைக்குழுக்கள், 10 ஒளிப்பதிவுக் குழுக்கள், தேர்தல் விதிகளுக்கு புறம்பாக பணம், பொருட்கள் உள்ளிட்டவை வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருகின்றன.

தேர்தல் தொடர்பான புகார்களை பெற்றுக் கொள்வதற்கு 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 044-27661950, 044-27661951 ஆகிய இரு தொலைபேசி எண்கள், 9445911161, 9445911162 ஆகிய இரு வாட்ஸ் அப் எண்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x