Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
குன்றத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரி நீரில் மூழ்கி தந்தை உயிரிழந்தார். மகள், மகன் உடல்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்றத்தூர் அடுத்த புதுவட்டாரம், திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் உஸ்மான்(39), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளனர். நேற்று 3 பேரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க வந்ததாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் 6-வது மதகின் அருகே நின்று ஏரியின் அழகை ரசித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மகள் ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற அவரது தம்பி குதித்துள்ளார். இருவரும் நீரில் மூழ்கியதை கண்ட உஸ்மான் பிள்ளைகள் இருவரையும் காப்பாற்ற நீரில் குதித்துள்ளார். இதில் 3 பேரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி உஸ்மானை மீட்டனர். ஆனால், அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய குழந்தைகளின் உடல்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குன்றத்தூர் போலீஸார் இறந்துபோன உஸ்மான் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT