Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு நூல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) ஓட்டிச் சென்றார். செல்லும் வழியில் சொந்த ஊருக்கு சென்ற சங்கர் மீண்டும் புறப்படும்போது தன்னுடன் மகன் சிவசங்கரையும் (11) அழைத்துச் சென்றார். நேற்று முன் தினம் இரவு லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், ஆஞ்சநேயர் கோயில் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சங்கர், சிறுவன் சிவசங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொப்பூர் போலீஸாரும், பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்களும் இணைந்து, விபத்தில் சிக்கிய லாரியை அகற்றினர். விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT