Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால், வழக்குத் தொடரப்படும், என ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கைத்தறித் தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மத்திய அரசால் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவீடுகளின்படி, கைத்தறிக்கென டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டுசேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள், விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின் போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு ஆறுமாத சிறை தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5000 வீதம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும்.
எனவே, ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து, ஈரோடு, சூரம்பட்டியில் ஜெகநாதபுரம் காலனியில் அமைந்துள்ள உதவி அமலாக்க அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT