Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

குமரியில் 100 % வாக்களிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்

நாகர்கோவில்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஜனநாயக கடமையைதவறாமல் நிறைவேற்றி 100 சதவீதவாக்களிப்பை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதிஇடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மூன்று சக்கர வாகன பிரச்சார விழிப்புணர்வு பேரணியை நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி தேர்தல், காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவுள்ளது.

மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 7,82,936 ஆண் வாக்காளர்கள், 7,84,488 பெண் வாக்காளர்கள், 203 இதரர்என மொத்தம் 15,67,627 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் புதிதாக54,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 2,243 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லை வழியாக வரும் வாகனங்களில் பணம் மற்றும் மதுவகைகள் கொண்டு வருவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிக்க காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 286 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் மாவட்டஎல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அதிக கவனம் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி தேர்தல்அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி தவறாமல் வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி, குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு வாகனப் பேரணிதோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பழனியாபிள்ளை தலைமையிலான கலைக்குழுவினர் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x