Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் 170 வாக்குச்சாவடி மையங்கள்பதற்றமானவை என தி.மலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. சிறப்பு குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏற்கெனவே 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 1,050 பேர் வரை ஒரு வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களாக இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால், அந்த வாக்குச்சாவடியை பிரித்து கூடுதலாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். அதன்படி, 513 கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் 2,885 வாக்குச்சாவடிகள் உள்ளன. கூடுதல் வாக்குச்சாவ டியில் மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துத்தரப்படும்.
தேர்தல் விதிகளை நடைமுறைப் படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு இருக்கும். மேலும், வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் செலவின கண்காணிப்பு குழுவும் இடம்பெறும். அனைத்துகுழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் இன்று (நேற்று) இரவு முதல் வாகனச் சோதனையில் ஈடுபடுவார்கள். பணப் பரிமாற்றத்தை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழுக் களின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும்.
உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பில் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் பரிமாற்றம் குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். ‘சி விஜில் அப்’ மற்றும் 1950 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை பின்பற்றி, தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 170 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களுக்கு தபால் துறை மூலம், அவர்களது வீட்டுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே, தொடங்கிய திட்ட பணிகளை தொடரலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT