Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவினால் சராசரி பெண்கள் எப்படி பாதுகாப்புடன் இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மதுராந்தகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது அப்போது முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மேடையிலேயே ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தபோதும் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலங்களை வழங்கினார்.
தற்போது தமிழகத்தில் மோசமான ஓர் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்கிறார் முதல்வர் பழனிசாமி. பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் காவல்துறை உயரதிகாரி தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளார். காவல்துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவினால் மற்ற பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும். காவல்துறையில் நடைபெற்றுள்ள இந்தச் செயல் மனித உரிமை மீறல். பொள்ளாச்சியில் நடந்த சம்பவமும் மக்கள் அனைவருக்கும் தெரியும்.
கடந்த ஓர் ஆண்டில் முதல்வர் பழனிசாமி அவசர அவசரமாக பல்லாயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கெல்லாம் எங்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? பிரதமர் மோடியும் இவர்களுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற 10 ஆண்டு கால ஊழல் ஆட்சியை மாற்றுவோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து திமுகவினர் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT