Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாகப் போராடி வருகிறார். முதல்வர் பழனிசாமியை சந்தித்தும் பாமக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக துணை முதல்வர் சட்ட மசோதவை அறிமுகம் செய்தார். அதன் நோக்ககாரண விளக்கவுரையில் கூறியிருப்பதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவினர் பிற சமூகத்தினருடன் போட்டியிட்டு, அவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டின் பலன்களின் சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை. மேலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்கள் அல்லது பதவி உயர்வுகளில் தனிப்பட்ட ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த வன்னியகுல சத்ரியர்களுக்கு வழங்க வேண்டும் என அவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்குள் உள்ள பல்வேறுபிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்கவைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்தார். தமிழகத்துக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை வழங்குவதற்காகவும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7 சதவீதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2.5 சதவீதம் ஆகிய 3 பிரிவுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும் அதற்கிணங்க இடஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா குறித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
2012-ம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன் இந்த ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT