Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழாவை முன்னிட்டு, நாளை (28-ம் தேதி)முதல் மார்ச் 9-ம் தேதி வரையும்,மார்ச் 16, 17 ஆகிய நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதியான இடங்களை வருவாய்த்துறை சார்பாக பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் பொங்கல் வழிபாடு கூடத்தில் உரிய அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட துறைஅலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், திருவிழா கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தகுந்தநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குளச்சல், மணவாளக்குறிச்சி, திங்கள்நகர் ஆகிய இடங்களிலிருந்து மண்டைக்காடு வரை சாலை ஓரங்களில் உள்ள மின்விளக்குகளில் பழுது நீக்க அறிவுறுத்தப்பட்டது.
நாளை (28ம் தேதி) முதல் மார்ச்9-ம் தேதி வரையும், மார்ச் 16, 17ஆகிய நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கேரளா போக்குவரத்து துறையினரை அணுகி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போக்குவரத்து துறையினருக்கு வலியுறுத்தப்பட்டது.
குடிநீர் வசதி, சாலைகள் சீரமைப்பு, தெப்பக்குளம் சீரமைப்பு, தீயணைப்பு வாகன வசதி,கடலில் நீராடும் பக்தர்களை பாதுகாத்திடும் வகையில் படகு மற்றும் நீச்சல் வீரர்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தற்காலிக கழிவறைகள் ஆகிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வீராசாமி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT