Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு பிரகாஷ் காரத் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் ஆணைய அறிவிப்பு விரைவில் வர உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் பிரச்சாரத்தை முன் கூட்டியே தொடங்க உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியை தோல்வி பெற வைக்கும்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேச உள்ளோம். இந்தியா முழுவதும் மக்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது. ஒரு சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்கையால்தான் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோலிய விலையில் 63 சதவீதம் கலால் மற்றும் வரிகள்தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. கலால் மற்றும் வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும். வரிகளைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளை தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x