Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம் காரணமாக சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய பணிமனை களில் இருந்து 60 சதவீதம் பேருந்து கள் மட்டுமே இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகளுக்கு தேவையான பேருந்துகள் இயங்கியதால், பயணிகளின் சிரமம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களில் 60 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. வரும் நாட்களில் 80 சதவீதம் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள்” என்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 4 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமாகன பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் இல்லை.
அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து மீதமுள்ள தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தனியார் பேருந்துகள் முழு அளவில் இயக்கப் பட்டதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
தருமபுரி மண்டலத்தை பொறுத்தவரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று 40 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 60 சதவீத பேருந்துகள் இயங்கின. வெளியூர்களுக்கு பணிகளுக்கு செல்வோர், பொதுமக்கள் அவதியுற்றனர்.
ஓசூர் - பெங்களூரு இடையே தமிழக அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயங்காததால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக ஓசூரிலிருந்து 10 சதவீத பேருந்துகளே நேற்று காலை முதல் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT