Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசியதாவது:
ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களை வைத்துக்கொண்டு அடுத்த ஆட்சியை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
தினகரன் தனிமரம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சசிகலா பெங்களூருவில் இருந்து வரும் போது என்னுடன் இருந்தவர்கள் பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். விழுதுகளாக நின்ற தொண்டர்களை பார்த்து பலர் அச்சமடைந்துள்ளனர். சசிகலா காரில் வரும்போது ஒரு போலீஸ் அதிகாரி கொடியை அவிழ்த்தார். இன்று அவரது நிலைமை பரிதாபமாக உள்ளது. பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்க ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும் தொண்டர்கள் பாடுபடவேண்டும்.
கரோனா காலத்தில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றும், ஒரு பக்கம் பல கோடி கடன் வாங்கியதாகவும் நிதிநிலை அறிக்கையில் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். இதை கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகங்களை எல்லாம் வருங்காலத்தில் கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் கடனில் தள்ளாடுகிறது. வெற்றிநடை போடவில்லை.
தாம்பரத்தில் மேம்பாலத்தால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது, என வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். மேம்பால வடிவமைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் எஸ்.அன்பழகன், மாவட்ட செயலாளர் ம.கரிகாலன், தாம்பரம் நகர செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT