Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
கிருஷ்ணகிரியில் பெங்களூரு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழி உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திம்மராயன் தெருவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர் முரளி. இவரது மனைவி கோபிகா (எ) மம்தாதேவி (34). இவரது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். இவருக்கும் பெங்களூரு உதயபுரா ரமேஷ் நகரைச் சேர்ந்த கார் மெக்கானிக் கிருஷ்ணா (34) என்பவருக்கும் தவறான பழக்கம் இருந்தது. கோபிகா திருமணத்துக்குப் பிறகும், கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி, கிருஷ்ணகிரி அருகே உள்ள பொன்மலை கோயில் மாந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுதொடர்பாக அப்போதைய தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி கொலை வழக்குப் பதிவு செய்து, கோபிகா, கிருஷ்ணகிரி வேடியப்பன் கொட்டாய் தெருவைச் சேர்ந்த மேச்சேரி (எ) செவத்தான்(40), மேலேரிக்கொட்டாய் சக்திவேல் (20) ஆகியோரை கைது செய்தார். இக்கொலை வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில், கோபிகாவுக்கு கொலை குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மேச்சேரி என்கிற செவத்தான், சக்திவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள், ரூ.10 ஆயிரம் அபராதம், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக மேலும் 7 ஆண்டுகள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT