Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
அவிநாசி நடுவச்சேரி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து, பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையை இழந்த விவசாயிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடுவச்சேரியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இதில் ஏராளமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் விவசாய நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதில், கடந்த ஜனவரி 31-ம் தேதிக்கு முன்பாக பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடுவச்சேரி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழங்கப்பட வேண்டிய பயிர்க்கடன், விவசாய நகை அடமானக்கடன் பல விவசாயிகளுக்கு தாமதமாக பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டதாகவும், இதனால் கடன் தாமதமாக கிடைத்த விவசாயிகள் முதல்வரின் தள்ளுபடி அறிவிப்பின் கீழ் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்தும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடுவச்சேரியில் கூட்டுறவு சங்க வளாகம் முன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சங்க வளாகத்துக்குள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படாததால், சங்கத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள அனைவருக்கும் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கடன் தள்ளுபடி கிடைக்க பெறாதவர்களுக்கு, அந்த சலுகை கிடைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT