Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

பிஏபி கிளை வாய்க்காலில் உடைப்பு விளை நிலத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் அதிருப்தி

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிஏபி கிளை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாத காரணத்தால் விளைநிலங்களில் நேற்று மீண்டும் தண்ணீர் புகுந்தது.

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்காக பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிஏபி வாய்க்காலின் கிளை வாய்க்கால் பொங்கலூரில் இருந்து பிரிந்து பல்லடம், அம்மாபாளையம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, சோமனூர் அருகேயுள்ள சாமளாபுரம் குளத்தில் கலக்கிறது.

இந்த கிளை வாய்க்காலின் பக்கவாட்டு தளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீரானது அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மூழ்குவது தொடர்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது மீண்டும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதுகுறித்து அம்மா பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால் பொங்கலூரில் இருந்து சாமளாபுரம் வரையுள்ள வழியோர கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் வாய்க்காலின் பக்கவாட்டு பகுதிகளில்உள்ள கரைகள் சேதமடைந்துள்ளன. கரைகளில் பெரிய அளவிலானதுளைகளுடன், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், கரைகள் சிதிலமடைந்தும் உள்ளன.

இதற்கு முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டபோது எங்களது பகுதியில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தபோது, தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் சரிசெய்வதாக கூறினர். ஆனால் தற்போது அடுத்த சுற்று தண்ணீர் திறக்கப்பட்டு, விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது பயிர்கள் அனைத்தும் பாழாகி விடும்” என்றனர்.விளைநிலத்துக்குள் புகுந்துள்ள பிஏபி வாய்க்கால் தண்ணீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x