Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (18-ம் தேதி) கிராமப்புற இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்திறன் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் திறன் பயிற்சிக்கான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று(18-ம் தேதி) காலை 9 மணிக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இம்முகாம், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப் பள்ளி பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பெத்ததாளப் பள்ளி ஊராட்சியில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மத்தூரில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், ஓசூர், கெலமங்கலம், சூளகிரி, தளி வட்டாரங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஓசூர் வட்டார இயக்க மேலாண்மை அலகிலும் நடைபெறுகிறது.
இதில், சில்லறை விற்பனை மேலாண்மை, உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், கணக்கியல் உதவியாளர், நர்சிங் பயிற்சிகள், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தையல் இயந்திர பயிற்சி, செக்யூரிட்டி பயிற்சிகள், டேலி பயிற்சி, அழகுக் கலை பயிற்சி, மருந்தக உதவியாளர், ஆட்டோ மொபைல் சர்வீஸ், வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள், இளநிலை மென்பொருள் டெவலப்பர், பொறியியல் பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்துதல், வெல்டிங் டெக்னிசியன், சூரிய தகடு பொருத்துதல், பொருட்கள் மற்றும் சேவை வரி, கணக்கியல் நிர்வாகி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சிகளில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்ற, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மகளிர் பங்கேற்று பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT