Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் கேலிக்கூத்தாக மாறிய ‘அரியர்’ தேர்வு அட்டவணை ஒரே நாளில் ஒரு மாணவர் 5 தேர்வுகளை எழுதும் விநோதம்

வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தில் ‘அரியர்’ பாடங்களுக்கான தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், ஒரே நாளில் ஒரு மாணவர் 5 பாடங்களுக்கான தேர்வு எழுத வேண்டிய கேலிக்கூத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக் கழக ஆசிரியர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளு வர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள 130-க்கும் அதிக மான கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் அரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘அரியர்’ தேர்வுகளுக்கான அட்டவணை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் தேர்வு நடைமுறையை கேலிக் கூத்தாக்கி இருப்பதாக பல்கலைக் கழக ஆசிரியர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

தேர்வு அட்டவணை

இளநிலை பட்டப்படிப்பில் இன்று (17-ம் தேதி) முதல் செமஸ்டரில் உள்ள அனைத்து பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. நாளை (18-ம் தேதி) இரண்டாம் செமஸ்டர் தேர்வும், வரும் 19-ம் தேதி மூன்றாம் செமஸ்டர் தேர்வும், வரும் 20-ம் தேதி நான்காம் செமஸ்டர் தேர்வும், வரும் 21-ம் தேதி ஐந்தாம் செமஸ்டரின் அனைத்து பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

அதேபோல், முதுநிலை பட்டப்படிப்பில் இன்று (17-ம்தேதி) முதல் செமஸ்டர், நாளை (18-ம் தேதி) இரண்டாம் செமஸ்டர், வரும் 19-ம் தேதி மூன்றாம் செமஸ்டர் தேர்வு நடை பெற உள்ளது.

ஒரே நாளில் அனைத்து தேர்வுகள்

இதுகுறுத்து கடலூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என கூறியுள்ளனர். அரியர் தேர்வுகளைப் பொறுத்தவரை சில மாணவர்கள் ஒரே செமஸ்டரில் 3,4,5 என பாடங்களுக்கான தேர்வு எழுத வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி ஒரே நாளில் ஒரு மாணவர் செமஸ்டரில் தேர்ச்சி பெறாத அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டியுள்ளது.

ஒரே நாளில் 3 அல்லது நான்கு பாடங்களுக்கு தேர்வு எழுதுவது என்பது சாத்தியமா? என்பதை பல்கலைக் கழக நிர்வாகம் யோசிக்க வேண்டும். ஒரே நாளில் எழுத வேண்டும் என வற்புறுத்துவதால் அந்த மாணவருக்கு பதில் வேறு மாணவர்கள்தான் தேர்வு எழுதுவார்கள். பிறகு, எதற்காக தேர்வு நடத்த வேண்டும். இது தேர்வு நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது’’ என தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர் ஒரே நாளில் 5 தேர்வு எழுத உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 6-வது செமஸ்டர் தேர்வு எழுத இருந்த அந்த மாணவர், 5-ம் செமஸ்டரில் தோல்வியடைந்த 5 பாடங்களுக்கும் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியிருந்தார்.

கரோனா ஊரடங்கால் அவர் 5 மற்றும் 6-வது செமஸ்டர் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் தற்போது, முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 5-ம் செமஸ்டர் தேர்வின் முடிவு தற்போது ரத்தானதால் மீண்டும் தேர்வு எழுத வேண்டியுள்ளது. அவர் வரும் 21-ம் தேதி 5 பாடங்களுக்கும் தேர்வு எழுத உள்ளார்.

அதேபோல், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலர் ‘இம்ப்ரூவ்மென்ட்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதினர். பல்கலைக் கழகத்தில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடத்தியது இங்குதான்’’ என தெரிவித்தார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் விசாரிக்க முயன்றபோது, உரிய பதில் கிடைக்கவில்லை.

ஒரே நாளில் 3 அல்லது நான்கு பாடங்களுக்கு தேர்வு எழுதுவது என்பது சாத்தியமா? என்பதை பல்கலைக் கழக நிர்வாகம் யோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x