Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவைத் தலைவர் ஆல்வாஸ் தலைமையில் தோடர் மற்றும் கோத்தர் பழங்குடியின மக்கள்,உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சோலூர் கிராமத்தில் 14 ஆயிரம்ஏக்கர் நிலம் வருவாய் மற்றும் வனக் கூட்டு நிலமாக உள்ளது. இதில் 350 ஏக்கர் நிலம் பழங்குடியினர் அனுபோகத்தில் உள்ளது. இந்த நிலங்களை வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கக் கோரி அளித்த மனு நிலுவையில் உள்ளது. ஆனால், பழங்குடியின மக்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் 95 பேருக்குவனத் துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதேபோல பழங்குடியின கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளை சீரமைக்க தடையில்லா சான்று வழங்க வனத் துறை மறுத்து வருகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் கைவசம் அனுபோகத்தில் உள்ளநிலங்களுக்கு பட்டா, உரிமைச் சான்று விரைந்து வழங்க வேண்டும். சாலைகளை சீரமைக்க தடையில்லா சான்று வழங்க வேண்டும். சிறு வன மகசூல் எவ்வித தடையுமின்றி, பழங்குடியின வன உரிமைப்படி பழங்குடியினர் சேகரித்து எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். கூடலூர் ஜென்மம் நிலத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT