Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
உடுமலை மற்றும் அவிநாசி பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்து கூறும்போது, "சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், உரிய காலத்தில் கடனை செலுத்தினால் தமிழக அரசு வட்டி சலுகை கொடுத்து வருகிறது. ஆகவே, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக பயிர்க் கடனுக்கு வட்டிச் சலுகை பெறுவதற்காக, கடன் கட்ட முடியாத சூழ்நிலையிலும் தனியாரிடம் கடன்வாங்கி, கூட்டுறவுக் கடனை செலுத்தி மீண்டும் கடனை புதுப்பித்து பயிர்க்கடன் பெறுகிறார்கள். இதனால், பயிர்க் கடன் நிலுவை இல்லாமல் ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே இருந்து வருகின்றனர்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடனை செலுத்திய விவசாயிகளுக்கும், ஜனவரி மாத அறிவிப்பு செய்தவரை கடனை புதுப்பிக்காமல் சில கூட்டுறவு சங்கங்கள் காலதாமதம் செய்ததால் கடன் கட்டிய விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. அதேபோல, ஜன.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை கடனை செலுத்தி புதுப்பிக்க பணம் செலுத்திய விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை.
இப்போது ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 10 முதல் 50-க்கும் மேற்பட்டோர் கடன் தள்ளுபடி கிடைக்காமல் உள்ளனர். கரோனா தொற்றால் விளைபொருட்களுக்கு விலை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தில்ஒருவருக்கு கடன் தள்ளுபடிஇல்லை என்ற நிலையில், கடன் தள்ளுபடி அறிவிப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், பிப்.5-ம் தேதி வரை கடனை செலுத்தியுள்ள விவசாயிகளுக்கும் முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்க மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாராபுரம் புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அளித்த மனுவில், "2017-18-ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தோம். தற்போது கல்லூரியில் படித்துவருகிறோம். ஆனால், எங்களுக்கு இன்னும் இலவச மடிக்கணினி அளிக்கப்படவில்லை. 6 மடிக்கணினிகள் மட்டுமே வந்துள்ளன. எஞ்சியவர்களுக்கு வரவில்லை என பள்ளித்தரப்பில் கடந்த ஓராண்டாக கூறப்படுகிறது. ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உயர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இலவச மடிக்கணினி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
பூளவாடிபுதூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் அமர்ந்து அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் வசிக்கும் 125 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் " என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT