Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM
சமூக பொறுப்புணர்வுக்காக ஒதுக்கப்படும் நிதியை தொழிற்சாலைகள் முறையாக செலவிட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு தலைமையேற்ற ஆட்சியர் மகேஸ்வரி பேசியதாவது:
தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடித்து பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும்.
இதற்கான தகுந்த முன்னேற்பாடுகளை தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேலும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக் கழிவுகள் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். அபாயகரமான கழிவுகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்பட்ட நிலத்தில் கொட்டுதல் மற்றும் மறு சுழற்சிக்கு அனுப்புதல் போன்றவை முறையாக கையாளப்பட வேண்டும்.
இது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சுற்றுப்புறங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் தொழில் நிறுவனங்களில் சமூக பொறுப்புணர்வுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்பட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT