Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சேலம் வரும் வழியில் தருமபுரி அருகே வாராகி அம்மன் கோயிலில் தமிழக முதல்வர் பழனிசாமி வழிபாடு நடத்தினார்.
திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டங்களில் பங்கேற்ற பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் வழியாக காரில் சேலம் சென்றார்.
முதல்வருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பர்கூர் அருகே பார்டர்காடு கிராமத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பர்கூர் பேருந்து நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையிலும், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி, மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்வில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.328 கோடி மதிப்பில் எண்ணேகொல் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தற்போது நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாரூர் ஏரியில் இருந்து ஊத்தங்கரை தொகுதியில் உள்ள 30 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும்,’’ என்றார்.
முதல்வர் பழனிசாமிக்கு தருமபுரி மாவட்ட எல்லையான கும்பார அள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் எம்எல்ஏ-க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி உள்ளிட்டோர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் புறப்பட்ட முதல்வர் காரிமங்கலம் அருகில் கெரகோட அள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வாராகி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு வழிபாடு முடித்த பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT