Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் திருமொழி திருநாள் பிப்.4-ம் தேதி தொடங்கி பிப்.7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் மாலையில் தாயார் மூலஸ்தானத்தில் திரு மொழி சேவித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதைத் தொடர்ந்து திருவாய் மொழி திருநாள் (ராப்பத்து) நேற்று தொடங்கியது. இதை யொட்டி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வழிநடை உபயங்கள் கண்டருளி ஆழ்வார், ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தை சேர்ந்தார். அங்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பக்தர்கள் சேவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மண்டபத்தி லிருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து, பிப்.12-ம் தேதி வரை தினந்தோறும் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

இவ்விழாவின் நிறைவு நாளான பிப்.13-ம் தேதி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கம், இயற்பா ப்ரபந்தம் சேவித்தல், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் ஆகியவை நடைபெற்று இரவு 7.45 மணிக்கு இயற்பா சாற்றுமுறை நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x