Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு ஈரோட்டில் மருத்துவர்கள் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஈரோட்டில் 4-வது நாளாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை மருத்துவர்கள் சுதாகர், செந்தில்வேல் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.

ஈரோடு

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஈரோட்டில் 4-வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் தனியார் மருத்துவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஈரோடு ஐ.எம்.ஏ. மாவட்ட செயலாளர் செந்தில்வேலு தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ. தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார், மருத்துவர்கள் வீரசிவம், தங்கவேலு மற்றும் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், குமாரபாளையத்தைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்..

இதுதொடர்பாக ஐ.எம்.ஏ. ஈரோடு கிளை பொருளாளர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள் செய்யலாம் என மத்திய அரசு கூறியிருப்பதை எதிர்த்து 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவரவர்கள் துறைசார்ந்த மருத்துவ முறைகளை பின்பற்றி சிகிச்சைகளை செய்ய வேண்டும். மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிப்பவர்கள் 2-ம் ஆண்டில் இருந்தே மருத்துவமனையில் இருந்து 5 ஆண்டுகள் அனுபவத்தை பெற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இது ஒரு கலை.

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவர்கள் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென கையில் கத்தி எடுத்து அறுவை சிகிச்சை செய்வது மக்களுக்கு மிகுந்த ஆபத்தில் முடியும். எங்களது போராட்டம் வரும் 7-ம் தேதி இரவுடன் நிறைவடையும்.

அதன்பின்னர், அடுத்த 7 நாட்களுக்கு பிப்.14-ம் தேதி வரை ஐ.எம்.ஏ. மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மத்திய அரசின் முடிவால் ஏற் படும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினையும் செய்து வருகிறோம், என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x