Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
மதுரையிலிருந்து மண்டபம் வரையிலான ரயில்வே வழித்தட மின்மயமாக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரயில்வே அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் ரூ.587.53 கோடி மதிப்பீட்டில், 985 கி.மீ. நீளத்துக்கு தண்டவாளப் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 2019- ம் ஆண்டு ஜனவரியில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர், ரயில்வே துறையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அதிகாரிகள் அளித்துள்ள பதில் விவரம்:
மதுரை - மானாமதுரை - ராமநாதபுரம் - மண்டபம் வழித்தடத்தில் மதுரையில் இருந்து மானாமதுரை வரை 46 கி.மீ. தூரம் இந்த மாதமும், மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை 59 கி.மீ. தூரம் இந்த ஆண்டு ஜூனிலும், ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை 37 கி.மீ. தூரத்துக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின் மயமாக்கும் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - மானாமதுரை - விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் புதுக்கோட்டை - காரைக்குடி வரை (37 கி.மீ.) வரும் ஆகஸ்ட்டிலும், காரைக்குடி - மானாமதுரை வரை (63 கி.மீ.) வரும் அக்டோபரிலும், மானாமதுரை - விருதுநகர் வரை (61 கி.மீ.) வரும் டிசம்பரிலும், விருதுநகர் - தென்காசி வரை (122 கி.மீ.) அடுத்த ஆண்டு செப்டம்பரிலும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில் திண்டுக்கல் - பாலக்காடு வரை (179 கிமீ) அடுத்த ஆண்டு மார்ச்சில் மின்மயமாக்கும் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT