Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM
தண்டனைக்குரிய இடமாக கருதப் பட்ட நிலைமாறி சிறைச்சாலைகள் தற்போது புனர்வாழ்வு மையங் களாக செயல்படுகின்றன என சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் தெரிவித்தார்.
சிறைத்துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 176 ஆண் காவலர்கள், 21 பெண் காவலர்கள் என 197 பேருக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 6 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா மற்றும் காவலர்கள் அணிவகுப்பு விழா நேற்று மாலை மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்றது.
சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறைக்காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:
சிறைச்சாலைகள் தண்டனைக் குரிய இடமாக கருதப்பட்ட நிலைமாறி, கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து தற்போது சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. சிறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டு, சிறைவாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய மண்டல ஐ.ஜி எச்.ஜெயராம், மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கனகராஜ், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா, தமிழ்நாடு சிறப்புக்காவல் படை முதலணி தளவாய் ஆனந்தன், பயிற்சி பள்ளி முதல்வரும், மத்திய சிறை கண்காணிப்பாளருமான கு.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறைக்காவலர்களின் கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT