Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM
மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய மருத்துவ கழக வேலூர் கிளை தலைவர் மருத்துவர் மதன் மோகன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘இந்தியாவில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாதம் முதல் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில் புதிய மருத்துவ கொள்கையை பரிந்துரை செய்துள்ளது. இதனால், ஆங்கில மருத்துவ சிகிச்சைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டித்து, அகில இந்திய மருத்துவ கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய மருத்துவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. காரணம், இங்குள்ள மருத்துவ படிப்புடன் பயிற்சிகளால் சிறந்த மருத்துவர்களாக அறியப்பட் டுள்ளனர். இதை சிதைக்கும் வகையிலான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சீனாவில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சையுடன் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதால் அவர்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. தற்போது, மத்திய அரசின் புதிய அறிவிப்பால் இந்திய மருத்துவர்களுக்கும் அதே நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்டவற்றை அதன் தனித்தன்மை மாறாமல் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கீடு செய்யலாம். சித்த மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவ சிகிச்சையை சேர்த்து அளிக்கும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த ஆராய்ச்சி எதுவும் இல்லை என்பதால் இது ஆபத்தான முயற்சியாக இருக்கும்.
எனவே, மத்திய அரசின் கலப்பு மருத்துவ சிகிச்சை முறை திட்டத்தை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய மருத்துவ கழகம் வேலூர் கிளை மற்றும் பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.
அப்பாது, இந்திய மருத்துவ கழக மாநில நிர்வாகி மருத்துவர் சடகோபன், இந்திய மருத்துவ கழக வேலூர் கிளை செயலாளர் மருத்துவர் நைலேஷ், பொருளாளர் மருத்துவர் ஜலாலு, துணைத் தலைவர் மருத்துவர் நர்மதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT