Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM

கிருஷ்ணகிரியில் நாளை 951 மையங்களில் 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 951 மையங்களில் 1,59,486 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (31-ம் தேதி) இளம்பிள்ளை வாத நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 888 மையங்கள், ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதிகளில் 63 மையங்கள் என 951 மையங்கள் இதற்காக செயல்படுகின்றன. இதில் 1,59,486 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதுமட்டுமல்லாமல் வேறு இடங்களில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பாலப் பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள், இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2.14 லட்சம் டோஸ் போலியோ சொட்டு மருந்து உரிய குளிர்சாதனப் பெட்டிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்தை விநியோகம் செய்வதற்காக பிற துறை வாகனங்கள் 31 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாகனங்கள் 53உட்பட 84 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 3880 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படஉள்ளனர்.

எனவே, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போட்டு இருந்தாலும், நாளை (31-ம் தேதி) நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x