Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
தொழில் நகரமான திருப்பூரை பொறுத்தவரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகரை தவிர்த்து, தற்போது படிப்படியாக மாவட்டம் முழுவதும் பின்னலாடைத் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகருக்குள் செயல்படும் பெரிய உற்பத்தி நிறுவனங்களில் இருந்து துணிகளை புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, ஜாப்-ஆர்டர் பணிகளை முடித்து, அவை மீண்டும் மாநகருக்குள் கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது.
மேலும் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநகருக்குள் வந்து செல்கின்றன. மேலும் பொதுமக்களின் பள்ளி, கல்லூரி மற்றும் அன்றாடப் போக்குவரத்து காரணமாக திருப்பூர் மாநகருக்குள் பிரதான சாலைகள் காலை 8 முதல் இரவு 9 மணி வரை பரபரப்பாகவும், வாகன நெரிசல் மிகுந்துமே இருக்கும்.
கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகருக்குள் பிரதான சாலைகள், முக்கிய இடங்களில் காவல் துறையால் வாகனங்களை நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் தடை மீறி வாகனங்களை நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.கார்த்தி என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது ‘‘மாநகராட்சி சந்திப்பு,பல்லடம் சாலை பழைய பேருந்துநிலைய பாலத்திலிருந்து தென்னம்பாளையம் சந்தை வரை, அவிநாசி சாலையில் புஷ்பா சந்திப்பு முதல் அனுப்பர்பாளையம் வரை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலைகளில் பகல் மற்றும் மாலை, இரவு நேரங்களில் சொகுசு கார்கள், சரக்கு வாகனங்கள் சாலையின் ஒருபக்கத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் இரு கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய இடத்தில் ஒரு கனரக வாகனம் மட்டும் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்களில் நெரிசல் ஏற்பட்டு, அனைத்து தரப்பினரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் ரோந்துப் பணிகளை போலீஸார் சரிவர மேற்கொண்டாலே இதைத் தடுக்கலாம். மாநகர காவல் ஆணை யர் இதை கவனித்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இவ்விவகாரம் குறித்து மாநகர காவல் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இப்பிரச்சினை குறித்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT