Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் விட வலியுறுத்தி, வட்டமலை அணை பாதுகாப்புக் குழு சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணைக்குள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியிலுள்ள இந்த அணையை நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகிறோம். தொடர்ச்சியாக பாசனம் இல்லாததால், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பலர், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சென்றுவிட்டனர். எந்த நோக்கத்துக்காக அணை கட்டப்பட்டதோ, அந்த நிலையில் விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த அணை, வட்டமலை ஆற்றின் குறுக்கே 600 ஏக்கர் பரப்பில், 6050 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 30 அடி உயரத்துக்கு 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. 1985-ம் ஆண்டு முதல் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. பிஏபி பாசனத் தொகுப்பில் இருந்து உபரிநீர் திறக்க அரசாணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டு, வெறும் காட்சிபொருளாக மட்டுமே உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல, அமராவதி ஆற்றிலும் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 10 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. இதனை நீரேற்று திட்டத்தின் மூலமாக வட்டமலை அணையில் சேர்க்க வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் அணைகளில் நீர் ததும்பும் நிலையிலும் வட்டமலைக்கரை ஓடை அணை வறண்டுகிடக்கிறது. இதனால், இந்த அணை மூலமாக பாசனம் பெறும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை வெளிப்படுத்தவே தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு போராட்டத்தை செய்தோம்" என்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பலரும் பங்கேற்று, தேசியக்கொடி ஏந்தி அணைப் பகுதியில் அணிவகுத்து சென்றனர்.
பட விளக்கம்
வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தேசியக்கொடியுடன் அணைப் பகுதியில் நேற்று அணிவகுத்து சென்ற விவசாயிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT