Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
தருமபுரி / கிருஷ்ணகிரி / ஓசூர்
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தினமான நேற்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், 25 பயனாளிகளுக்கு ரூ.35.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நடந்தது. இந்தவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா பங்கேற்றுதேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர், திறந்தநிலை காவல்துறை வாகனத்தில் இருந்தபடிகாவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மேலும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களை வானில் பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். அதேபோல, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 290 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை ஆட்சியர் வழங்கினார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி துணை ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணியாற்றி பல்வேறு துறைகளை சேர்ந்த 119 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், காவல் துறையினர் 48 பேருக்கு பதக்கங்களையும், உணவு தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 2 சத்துணவுப் பணியாளர்களுக்கு, சிறந்த சத்துணவு பணியாளர் விருது ஆகியவற்றையும் வழங்கினார். 25 பயனாளிகளுக்கு ரூ.35.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் ஆகியோர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பெரியார் நகரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி மறைந்த சண்முகம் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரது மனைவி சரோஜாவுக்கு கதர் ஆடை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கி நலம் விசாரித்தனர்.
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார். இதில் ஓசூர் வட்டாட்சியர் செந்தில்குமார், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.ஓசூர் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி வைத்தார்.
ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்ற விழாவில் ஆணையர் செந்தில்முருகன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார்.ஓசூர் சமத்துவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் நாமகிரி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர் ஜி.சாம்சன்சுந்தரம் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர் பொன்நாகேஷா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT