Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் தலைமை வகித்துமாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தவறாமல்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, நமது மாவட்டத்தில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நமது மாவட்டத்தில் 683- ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 903- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. பணம் அல்லது பரிசு பொருட்கள் பெற்றுக் கொண்டு வாக்களித்தால், தங்களது உரிமைகள் விற்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் நேர்மையாக வாக்களித்து, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கலந்து கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT