Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்தனர்.
பனையூர், பெரியூர், நெல்கட்டும்செவல், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 2,500 ஏக்கரில் மக்காச்சோளம், ஆயிரம் ஏக்கரில் உளுந்து போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நனைந்து சேதமடைந்தன.
மக்காச்சோளம், உளுந்து போன்றவை செடியிலேயே முளைத்துவிட்டன. ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். பயிர்கள் சேதமடைந்ததால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இதுபோல், திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மழையில் சேதமடைந்த பயிர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை, நடுவப்பட்டி, வரகனூர் பகுதிகளில் சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் மழையில் சேதமடைந்துள்ளன. பயிர்ச் சேதத்தை வேளாண் அதிகாரிகள் இதுவரை நேரடியாக வந்து ஆய்வு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
நெடுவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18-ம்ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘தங்களுக்கு இதுவரை இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், உயர்கல்விக்காக உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT