Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM
திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலமாக தொழிலாளர்கள் உட்பட சுமார் 5 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இரண்டு மாவட்டங்களிலும் உள்ள விசைத்தறிகளில், 90 சதவீதம் கூலிக்கு நெசவு செய்யும்அடிப்படையில் இயங்குகின்றன. இத்தகைய சூழலில், கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி கிடைக்காததால் வங்கிக் கடன்களை அடைக்க முடியாத சூழலில் விசைத்தறியாளர்கள் தவித்து வருவதாக, திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், கடந்த சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, விசைத்தறியாளர்களின் மூலதனக் கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடன் தள்ளுபடி குறித்து ஏதேனும் அறிவிப்பார் என விசைத்தறியாளர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எதுவும் குறிப்பிடாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, "கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக முதல்வர் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, விசைத்தறியாளர்கள் கடனை தள்ளுபடி செய்து, எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT