Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

5 மாநில ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் மதுரை வடக்கம்பட்டியில் பிரியாணி திருவிழா 5 ஆயிரம் பேருக்கு பிரசாதம்

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க அண்டாக்களில் தயாரான பிரியாணி.

மதுரை

மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 200 கிடாய், 200 கோழிகளைப் பலியிட்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி பிரசாதம் 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

மதுரையை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இடங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களது காவல் தெய்வமான முனியாண்டி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது. இங்கு பிரியாணி திருவிழாவை ஆண்டுதோறும் நாயுடு, ரெட்டியார் ஆகிய சமூகத்தினர் தனித்தனியாகக் கொண்டாடுவர்.

நாயுடு சமூகத்தினர் 86-ம் ஆண்டு திருவிழாவை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதற்காக 5 மாநிலங்களிலும் ஓட்டல் நடத்தி வரும் ஏராளமான முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வடக்கம்பட்டி வந்தனர். இதையொட்டி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

சுவாமிக்கு காலையில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். மாலையில், மேளதாளத்துடன் ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஊர்வலத்துடன் சென்று பொங்கல் வைத்தனர். இரவு முழுவதும் சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 200 கிடாய், 200 கோழிகள் பலியிடப்பட்டன. இறைச்சியை 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி 50 அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. விடிய,விடிய தயாரான பிரியாணியை முனியாண்டி சுவாமிக்கு படையல் செய்து அதிகாலை சிறப்புப் பூஜை நடந்தது.

பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள், ஆடு, கோழி வழங்கியவர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் எனப் பல ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. வடக்கம்பட்டியைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர் மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பிரியாணி பிரசாதம் வாங்கிச் சென்றனர்.

5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை பெற்றுச் சென்றனர். 2 நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், காரைக்குடியில் முனியாண்டி விலாஸ் என சுவாமியின் பெயரில் முதல் உணவகம் 1937-ம் ஆண்டு வடக்கம்பட்டியைச் சேர்ந்த குருசாமியும், இதன் பின்னர் ராமு என்பவர் கள்ளிக்குடியிலும் தொடங்கினர். தற்போது 1,500-க்கும் அதிக ஓட்டல்கள் முனியாண்டி சுவாமி பெயரில் செயல்படுகின்றன. இந்த ஓட்டலுக்கு வரும் முதல் வாடிக்கையாளர் வழங்கும் பணம் அல்லது லாபத்தின் ஒரு பகுதியை உண்டியலில் ஓராண்டுக்கு சேகரித்து முனியாண்டி சுவாமி பூஜைக்கு வழங்குவதை ஓட்டல் உரிமையாளர்கள் ஐதீகமாகக் கடைப்பிடிக்கின்றனர். இங்கு சுத்தமான ஆட்டுக்கறி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தொழில் துரோகத்தில் ஈடுபடமாட்டோம் என முனியாண்டி சுவாமியிடம் சத்தியம் பெற்றே ஓட்டல் தொடங்குகிறோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதற்கு இதுவே காரணம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x