Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
சேமிப்பின் அவசியம் குறித்து, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எடுத்துரைத்து சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பில் 2020-21-ம் ஆண்டுகான உலக சிக்கன நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மாவட்ட, வட்டார மற்றும் நகராட்சி அளவிலான மகளிர் மற்றும் நிலை முகவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசும்போது, ‘‘மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தனது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டும்.
சேமிப்பின் அவசியத்தை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு சிக்கனமாக வாழ்ந்து, தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.,’’ என்றார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) தேவராஜன், மாவட்ட சேமிப்பு அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான அசோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT