Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2021-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

காஞ்சி/திருவள்ளூர்/செங்கை

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களின் 2021-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

திருவள்ளூர் மாவட்ட இறுதிவாக்காளர் பட்டியலை மாவட்டதேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொன்னையா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த பட்டியலின்படி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி(தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய10 சட்டப்பேரவை தொகுதிகளில் 17,30,117 ஆண் வாக்காளர்கள், 17,67,940 பெண் வாக்காளர்கள், இதரர் 772 என மொத்தம் 34,98,829 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக மாதவரம்தொகுதியில் 4,50,717 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,67,673 வாக்காளர்களும் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆட்சியர் பொன்னையா கூறும்போது, ‘’சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்கள் 1,31,346. இதில் 1,28,428 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; 2,917 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் வெளியிட்டார். இந்தப் பட்டியலின்படி சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம்(தனி) ஆகிய 7 தொகுதிகளில் 13,46,543 ஆண் வாக்காளர்கள், 13,69,458 பெண் வாக்காளர்கள், இதரர் 384 என மொத்தம் 27,16,385 வாக்காளர்கள் உள்ளனர். இதில், அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,94,845 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக மதுராந்தகம் தொகுதியில் 2,26,346 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதிவாக்காளர் பட்டியலை மாவட்டஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டார். இதன்படி ஆலந்தூர், பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் என மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 6,41,462 ஆண் வாக்காளர்கள், 6,73,685 பெண் வாக்காளர்கள், இதரர் 182 எனமொத்தம் 13,15,329 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 3,89,857 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 2,59,633 வாக்காளர்களும் உள்ளனர்.

3 மாவட்டங்களின் இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், அம்பத்தூர் மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அலுவலக நேரங்களில் பொதுமக்கள் நேரடியாக பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x