Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்தும் ஜெயலலிதாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தேனி அருகே அரண்மனைப்புதூரில் நேற்று தேனி வடக்கு மாவட்ட திமுக.சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஆட்சியாளர்களைவிட மக்களை அதிகம் சந்தித்து அவர்களின் குறைகளைச் சரி செய்து வருகிறோம். கரோனா ஊரடங்கு காலத்தில் `ஒன்றிணைவோம் வா' இயக்கம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்களை வழங்கினோம்.
ஓ.பன்னீர்செல்வம் விசுவாசத் துக்குப் பெயர் பெற்றவர் என்று சொல்கிறார்கள். ஆனால், மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்தும், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விவரங்களை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
சசிகலா வெளியில் வந்ததும் இவர்கள் பதவியில் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். நான்கு மாதங்களுக்குப் பின் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கும். தமிழகத்தில் கல்விக்கடன், நகைக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கேஎன்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தமிழரசி, தேனி தெற்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்பி.செல்வேந்திரன் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT