Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் திருப்பூர் தொழிற்சங்கத்தினர் மனு

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், தொழில்துறையினருடன் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் (தொழிலாளர்) நேற்று ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த பர்துருஹரிமதாப் தலைமையிலான 18 எம்பி-க்கள் மற்றும் ஏ.இ.பி.சி தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்ட தொழில்துறையினர் பங்கேற்றனர்.

இதில் ஏ.சக்திவேல் பேசும்போது, "பருத்தி ஆடைகள் பிரதானமாக உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்வதைக் கடந்து, செயற்கை நூலிழை ஆடைகளை உற்பத்தி செய்து வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். திருப்பூர் தொழில்துறையினருக்கு ஏதுவாக தொழிலாளர் தங்குவதற்கு விடுதிகள் மற்றும் வீட்டு வசதிகளை அரசு செய்து தர வேண்டும்" என்றார். நாடாளுமன்றத்தின் தொழிலாளர் பிரிவு நிலைக்குழுவினரிடம், சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎஃப் தலைவர் க.ராமகிருஷ்ணன், ஐஎன்டியுசி செயலாளர் ஏ.சிவசாமி, ஹெச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எஃப் செயலாளர் மனோகரன் ஆகியோர் கூட்டாக அளித்த மனுவில், "மத்திய அரசு 44 தொழிலாளர், தொழிற்சாலைகள் குறித்த சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக திருத்தியுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுவில் தொழிற்சங்கங்கள் தெரிவித்த ஆலோசனைகளை, திருத்தங்களை கவனத்தில் கொள்ளாமல், தொழிலா ளர்களுக்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய நிலைக்குழு வலியுறுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை சந்தா செலுத்துகின்றனர். ஆனால், மாவட்டத்தில் இஎஸ்ஐ மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி னார். ஆனால் இன்றுவரை மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்பட வில்லை. விரைவில் 500 படுக்கைகள், நவீன வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும்.

பி.எஃப். எனப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். பிஎஃப் தொடர்பான கோரிக்கைகளுக்கு கோவை மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

இங்குள்ள பிஎஃப் அலுவலகத்தை மண்டல அலுவலகத்துக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்" என்று குறிப் பிட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x