Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

மக்கள் தேர்ந்தெடுக்காமல் பதவிக்கு வந்ததால் அவர்களைப் பற்றி சிந்திக்கவில்லை முதல்வர் பழனிசாமி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

ஆவடி அருகே கோணாம்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தார்.

திருவள்ளூர்

முதல்வர் பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை‌. அதனால் அவர் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோணாம்பேடு கிராமத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், கிராமிய இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொங்கல் வைத்து கொண்டாடினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: `தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதுபோல விரைவில் வழி பிறக்கும். இந்த மேடையின் வலது பக்கத்தில் கோயில் உள்ளது. நம்மை ஏதோ கோயிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். `கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது’ என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, `பராசக்தி’ பட வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் புரிந்துகொள்ளாமல் பாஜக. ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலர், திட்டமிட்டு திமுக ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய மனைவி போகாத கோயிலே கிடையாது. திமுகவில் இருக்கக்கூடிய பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்தப் பக்தியை நாங்கள் குறைச் சொல்லவில்லை. அது அவர்களுடைய விருப்பம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது அண்ணாவின் உறுதிமொழி. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றி கொண்டிருக்கிறோம். என்னதான் திட்டமிட்டு திமுக மீது பழி சுமத்திக் கொண்டிருந்தாலும், அவை எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்டத்தான் போகிறார்கள்.

அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. தற்போதைய அதிமுக ஆட்சி கொடுமையானது. முதல்வர் பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை‌. அதனால் அவர் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் திடீரென அரசியல் வாரிசாக வந்துவிட்டதைப் போல அவர் பேசுகிறார். எனக்கு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றுப் பின்னணி உள்ளது.

தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் அதிமுக ஆட்சியால் வேலைவாய்ப்பு இல்லை; பெண்களின் முன்னேற்றம் பாழ்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயங்களைத் தரக்கூடிய வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது. அதிமுக அரசோ, வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x