Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

அனுமன் ஜெயந்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன்ஜெயந்தியையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி. அடுத்தபடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர். கடைசி படம்: ஈரோடு சூரம்பட்டி  சக்தி விநாயகர் கோயிலில் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.

கிருஷ்ணகிரி

அனுமன் ஜெயந்தி விழாவினை யொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியவை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில், உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகள் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நிர்மால்யம், சிறப்பு அபிஷேகம், வேத பாராயணம், 6 மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. ஆஞ்சநேயர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

சேலத்தில் சிறப்பு பூஜை

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் உள்ள பிரம்மாண்டமான ஆஞ்சநேயருக்கு, அதிகாலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் பலவகை மலர்களால் ஆன மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் பட்டைக்கோயில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஈரோட்டில் கோலாகலம்

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கோட்டை பெருமாள் கோயில், கள்ளுகடைமேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோயில், காரைவாய்க்கால் ராத்திரி சத்திரம் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சுவாமி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x