Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
போச்சம்பள்ளி வாரச் சந்தையில், பொங்கல் விழாவை ஒட்டி நேற்று விறுவிறுப்பான வர்த்தகம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமையில் வாரச் சந்தை கூடுவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் வாரச் சந்தை கூடியது. வரும், 14-ம் தேதி பொங்கல் திருவிழா வர உள்ள நிலையில் கூடிய வாரச் சந்தை என்பதால் நேற்று காலை முதலே சந்தையில் விறுவிறுப்பான வர்த்தகம் நடந்தது.
வழக்கமாக அதிகாலையில் ஆடு, கோழி விற்பனைக்கான சந்தை கூடும். சுமார் 11 மணி வரை இவற்றின் விற்பனை நடக்கும். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு தேவையான இதர பொருட்களின் வர்த்தகம் மாலை வரை நடக்கும். நேற்றைய காலை சந்தையில் ஆடு விற்பனை மிக விறுவிறுப்பாக நடந்தது. பொங்கல் விழாவின் இறுதி நாளான கரிநாளில் பலரும் வீடுகளில் அசைவ உணவை சமைப்பது வழக்கம். இதற்கான தேவைகளைக் கருதி முன்னதாகவே ஆடுகளை வாங்கி இருப்பு வைப்பர். எனவே, நேற்றைய சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. வழக்கமாக ரூ.4000 முதல் ரூ.5000 வரை விற்பனையான ஆடுகள், நேற்றைய சந்தையில் ரூ.5000 முதல் ரூ.6000 வரை விற்பனை ஆனது.
அதைத் தொடர்ந்து மளிகைப் பொருட்கள், காய்கறி, தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், மணிகள், வண்ணப் பொடிகள், பொங்கலுக்குத் தேவையான பானை, அடுப்பு உள்ளிட்ட மண் பாண்டங்கள், விவசாய மற்றும் வீட்டு தேவைகளுக்கான இரும்புக் கருவிகள் என இதரப் பொருட்களின் வர்த்தகமும் மாலை வரை விறுவிறுப்பாக நடந்தது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி கிராமங்களில் வருவாய் அற்ற சூழல் நிலவியது. நடப்பு ஆண்டில் நல்ல மழை பெய்திருப்பதால் தொடர்ந்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் பலரும் போதிய வருமானம் ஈட்டி வருகின்றனர். எனவே, நடப்பு ஆண்டில் பொங்கலை நிறைவாகக் கொண்டாடும் வகையில் போச்சம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதி மக்கள் நேற்று வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘வாரச்சந்தையில் சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT