Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய் விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறிவுரை

திருப்பூர் அம்மாபாளையத்தில் கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் ஆடுகள்.

திருப்பூர்

நீலநாக்கு நோயில் இருந்து செம்மறி ஆடுகளை பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய், வெள்ளாடுகளை தாக்கினாலும் நோயின் தீவிரம் செம்மறி ஆடுகளில் அதிகமாக காணப்படும்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கால்நடை விவசாயிகள் கூறும்போது, "இந்நோய் வந்து விட்டால் ஆடுகளுக்கு அதிக காய்ச்சல் ஏற்படும். நோய்க் கிருமிகள் தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாக பரவாது. மூக்கிலிருந்து தண்ணீர் போன்ற திரவம் வெளிவரும். 2 முதல் 3 நாட்களில் சளியாக மாறும். சளியாக மாறிய திரவம் காய்ந்து திடமாகி, நாசித் துவாரங்கள் அடைபட்டு ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும். வாயின் உட்பகுதி ஈறுகள், நாக்கு, நாசித்துவாரங்களின் உட்புறம் ஆகியவற்றில் புண்கள் காணப்படும். உதடுகள், காதுமடல் தடை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வீக்கம் ஏற்படும். நாக்கு நீல நிறமாக மாறிவிடும். ஆடுகளின் கால்கள் வலியுடன் காணப்படும். உடலின் மேலுள்ள உரோமங்கள் உதிரும். சில ஆடுகளில் கழுத்து ஒரு பக்கமாக இழுத்ததுபோல காணப்படும்" என்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் ந.ஆனந்தராஜா, கால்நடை மருத்துவ அறிவியல் உதவிப் பேராசிரியர் ப.சித்ரா ஆகியோர் கூறும்போது, "செம்மறி ஆடுகள் மழையில் நனைவதால் அழற்சி ஏற்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் கண்டறிந்த ஆடுகளை தனியே பிரித்து பராமரிப்பதுடன், மேய்ச்சலுக்கு விடக்கூடாது. நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் வாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது சாதாரண உப்புக் கரைசலைக் கொண்டு கழுவ வேண்டும். 100 மி.லி. கிளிசரின், 10 கிராம் போரிக் அமிலப் பவுடரை நன்கு கலந்து புண்களில் தடவ வேண்டும்.

வேப்பிலை கொண்டு புகைமூட்டம் போட்டு, சிறிது நேரம் கழித்து ஆடுகளை பட்டியில் அடைப்பதன் மூலமாக கொசுக்களை கட்டுப்படுத்தலாம். ஆறு மாத வயதுடைய ஆடுகளில் முதல் தடுப்பூசியும், பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்துக்கு முன்பாகவும் தடுப்பூசி போட வேண்டும். இவற்றை கால்நடை விவசாயிகள் பின்பற்றினால் நீலநாக்கு நோயை கட்டுப்படுத்தலாம்" என்றனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறும்போது, "நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டம் முழுவதும் ஆடுகளுக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x