Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM
திருப்பூர் பின்னலாடை துறையில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் மற்றும் அதைத்தொடர்ந்த பாதிப்பால் தற்போது ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை அளிக்கும் இத்துறையில், தொழிலாளர்களுக்கான சம்பளமானது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் பேச்சுவார்த்தை மூலமாக முடிவு செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது.
2012-ம் ஆண்டுக்கு பிறகே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்பது முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்தது. அந்த வகையில், 2016-ம் ஆண்டு போடப்பட்ட சம்பள உயர்வு ஒப்பந்தமானது, 2020 மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியானது. இந்த ஒப்பந்தத்தில் முதலாமாண்டு தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து 18 சதவீத உயர்வும், அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 5 சதவீத உயர்வும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பந்தம் காலாவதியான நிலையில், அடுத்த ஒப்பந்தமானது இதுவரை போடப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா), திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டிஇஏ) உள்ளிட்ட முதலாளிகள் சங்கங்களுக்கு, தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் முன்னேற்றங்கள் இல்லை என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
கோரிக்கைக்கு பதில் இல்லை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் காலாவதியாகும் முன்னரே அடுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவிடுத்தோம். அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து ஒரே கோரிக்கையாக அளிக்க முதலாளிகள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர். ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎஃப், ஐஎன்டியுசி உட்பட 7 சங்கங்களைச் சேர்ந்த கோரிக்கையை ஒருங்கிணைத்து, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பின்பும் முதலாளிகள்சங்கத்தினர் முடிவை அறிவிக்கவில்லை. இதற்கிடையே, கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவால் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர், உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டு மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய சூழலில் கோரிக்கை குறித்து கேட்டபோது, தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு பேசலாம் என்றனர். அதோடு சரி, தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.
விலைவாசி உயர்வு
கடந்த 4 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. இதனால், தொழிலாளர்களின் வீடுகளில் வறுமை நிலவுகிறது. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், பெற்றோருக்கு உதவ வேலைகளுக்கு செல்ல தொடங்கிய குழந்தைகள் மீண்டும் படிக்க செல்வார்களா என்பது உறுதியாக கூற முடியாது. இதில் உள்ள விபரீதத்தை புரிந்துகொள்ள வேண்டும்.ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பெரும்பங்கை தன்னகத்தே கொண்டுள்ள திருப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள தொழிலாளர்களின் நிலை மோசமாகவே உள்ளது. அவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும். அதற்கு முதலாளிகள் சங்கத்தினர் உடனடியாக சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கு பிறகு
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினத்திடம் கேட்டபோது, "கரோனா பாதிப்பில் தொழில் துறை சிக்கியிருந்த நிலையில் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் உற்பத்தியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். அதற்கேற்ப தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பலன் கிடைக்க வேண்டும். இதுகுறித்து பொங்கலுக்கு பிறகு அனைத்து உற்பத்தியாளர் சங்கங்கள் கலந்து பேசி முடிவு செய்வார்கள்" என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "இவ்விவகாரத்தில் ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT