Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

ரூ.1.04 லட்சம் பணம் பறிமுதல் வழக்கில் உதவி இயக்குநர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

வேலூர்

வேலூர் அண்ணா சாலை ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் பரந்தாமன் என்பவர், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் லஞ்சப் பணத்தையும் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 11 மணி வரை நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.04 லட்சம் ரொக்கம், புத்தாண்டு டைரிகள், பழங்கள், ஸ்வீட் பாக்ஸ்கள், சால்வைகளை பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத பணம் வசூல் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். அதில், அங்கிருந்த பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர் மாறன், பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலக பதிவு எழுத்தர் முரளி மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோருக்கும் இந்த பணம் வசூலில் முக்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், ரூ1.04 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உதவி இயக்குநர் பரந்தாமன், செயல் அலுவலர் மலர்மாறன், மாரிமுத்து, முரளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x