Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ் மற்றும் நந்தகுமார் அடங்கிய குழுவினர் கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா, உணவுப் பொருள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டுள்ளதா, சுகாதாரமான முறையிலும் தரமான வகையிலும் தயாரிக்கப்படுகிறதா, உணவு பாதுகாப்பு உரிமங்கள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் கலப்பட தேயிலைத்தூளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அத்தகைய கடைகள் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 5 கிலோ கலப்படத் தேயிலைதூள் மற்றும் காலாவதியான ரூ.4 ஆயிரம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, ‘‘தேயிலைத் தூளில் கலக்கப்படும் சாயத்தால், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கடைக்காரர்கள் இதுபோன்ற கலப்பட தேயிலைத் தூளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விதி மீறல் தொடர்ந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் அனைத்துகடைக்காரர்களும் உணவுப்பாதுகாப்பு உரிமம் கட்டாயமாக பெற வேண்டும். உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT